கல்வி சமுதாயத்தின் பொறுப்பாக இருந்த காலம் மாறி, எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை நாடும் நிலை உருவாகியிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை பகுதியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி கட்டட திறப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், கிராமங்களில் கல்வி சமுதாயத்தின் பொறுப்பாக இருந்த காலத்தில் ஆசிரியர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், குழந்தைகளை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் மாற்றும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை நாடும் நிலை உருவாகியுள்ளதால், கிராமங்கள் அதன் சுயமரியாதையை இழந்து விட்டதாகவும், நாட்டிற்கு இது நல்லதல்ல என்றும் கூறினார்.