ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தென்காசி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தென்காசி நகரச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜக-வினர் பங்கேற்றனர்.
அதேபோல, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தச்சூர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் டில்லி பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பாஜக-வினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திருவண்ணாமலை, மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிவொளி பூங்கா எதிரே தெற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுத்து பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் எனவும், எதிர்க்கட்சிகள் குறை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.