அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களும் காட்சியளிக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் சிவபெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இந்நிலையில், சித்திரை தேர்த்திருவிழாவின் 5ஆம் நாள் நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களுக்குக் காட்சியளிக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
63 நாயன்மார்களும் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் முன்பு காட்சியளித்தனர். இதனை அடுத்து சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.