சென்னையில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு நாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கண்டு பாகிஸ்தான் அதிர்ந்து போயிருப்பதாகத் தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது 21 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்ட கரு.நாகராஜன், அப்போதெல்லாம் வாய் திறக்காத காங்கிரஸ் இப்போது பேசத் தகுதியற்றவர்கள் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் எப்பொழுதுமே கோழைகளாகவே ஆட்சி நடத்தக்கூடிய கட்சி என விமர்சித்தார்.