பயங்கரவாதத்தை அழிக்கும் மத்திய அரசின் வேள்வியில் நாமும் கலந்து கொள்வோம் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த மனிதத் தன்மையற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாகவும், அதில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு நீதி பெற்றுத் தரும் நோக்கிலும் இன்று விடியற்காலையில் “ஆபரேஷன் சிந்தூர்”-ஐத் தொடங்கியது நமது இந்திய ராணுவம்.
“பயங்கரவாத உள்கட்டமைப்பை” குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதல்களைத் திட்டமிட்ட இந்தியா, நேரடியாக பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரிலும் ஒன்பது தீவிரவாத பயிற்சி முகாம்களை தாக்கி அழித்துள்ளதை பாகிஸ்தானும் உறுதிப்படுத்தியுள்ளது.
பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தான் மீது முழு வீச்சோடு போரைத் தொடங்க அனைத்து காரணங்கள் இருந்தும், பழிவாங்கலை விட துல்லியமான திட்டமிடலையும், அநாவசியமான குழப்பத்தை விட உயிரிழந்தோருக்குக்கான நீதியையும் மட்டுமே நமது நாடு தேர்ந்தெடுத்துள்ளது.
மறைந்திருந்து தாக்காமல், அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் நமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயலும் பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மூலம், நமது பாரதிய நாகரிக வலிமை என்ன என்பதை மீண்டும் உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது நமது இந்திய ராணுவம்.
அதே சமயம் பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் இந்தியா அவர்களைத் துரத்தி வேட்டையாடும் என்பதும் பாகிஸ்தானின் தவறான பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா ஒருபோதும் சகிப்புத்தன்மை காட்டாது என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
தூங்கும் புலியை சீண்டினால் என்ன நடக்கும் என்பதை பாகிஸ்தான் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானின் மையத்தில் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் வழக்கமான மோதல் மண்டலங்களுக்கு எல்லாம் அப்பால் தொலை தூரத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியான பஹவல்பூர் என்பது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவுடன் நீண்ட காலமாக தொடர்புடையது என்பதும், அவர்களது கூடாரங்கள் உள்ள பகுதி என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அந்தப் பகுதியின் மீதான இந்தியாவின் தாக்குதல் எதை காட்டுகிறது? இருக்கும் இடத்தில் இருந்தே பிற நாடுகளில் தலைமறைவாக பதுங்கியுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் வல்லமை கொண்ட நாடு நமது இந்தியா என்ற உண்மையையும், இந்தியாவால் தொட முடியாத எந்த பகுதியும் பாகிஸ்தானில் இல்லை என்ற செய்தியையும் உலகிற்கு உணர்த்துகிறது.
காரணம், 2016 -ல் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த நமது இந்திய கமாண்டோக்கள் பாகிஸ்தான் மீது ரகசிய தரைவழித் தாக்குதல்களை நடத்தினார்கள். அதே போன்று 2019 -ல் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாம் மீது நடத்தப்பட்ட பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலும் ஒரு பகல்நேர வான்வழித் தாக்குதலாகும்.
ஆனால் இவையனைத்திற்கும் நேர்மாறாக, பாகிஸ்தானின் ஆழமான பகுதியான பஹவல்பூர் உள்ளிட்ட ஒன்பது வெவ்வேறு இலக்குகளைத் தாக்கிய “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இந்த ஏவுகணைத் தாக்குதலானது கடந்த கால நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
நமது பாரத நாட்டை அன்னிய சக்திகளிடமிருந்து காக்கக் கூடிய வலிமை பெற்றவரான பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கும், நமது ராணுவத்தின் முப்படைகளுக்கும் மீண்டுமொருமுறை நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் நம்மை விட்டு பிரிந்து சென்ற அந்த 28 உயிர்களுக்கும் இந்நாளில் மீண்டுமொருமுறை அஞ்சலி செலுத்தி நம் வீர வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு, சாதி, மதம், மொழி என அனைத்தையும் கடந்து, இந்திய மக்கள் அனைவரும் நமது ராணுவத்துடன் கைகோர்த்து அவர்களுக்கு அளவற்ற ஆதரவைத் தர வேண்டிய நேரமிது என்பதை நமது நெஞ்சில் நிறுத்துவோம். தொடர்ந்து விழிப்புடன் இருப்போம்.
மத்திய அரசு பரிந்துரை செய்யும் போர் பயிற்சிக்கான நெறிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவோம். போர் என்ற சூழல் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்போம், மனத் தைரியத்துடன் பயங்கரவாதத்தை அழிக்கும் நமது மத்திய அரசின் இந்த வேள்வியில் நாமும் கலந்து கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.