கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்குச் சூறைக் காற்றால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், பயிர்க் காப்பீடு திட்டத்தைச் சரிவரச் செயல்படுத்தாத காரணத்தால் போதிய இழப்பீடு கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபற்றிய விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம், காந்தவயல், மருதூர், வெள்ளியங்காடு, தாயனூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வாழை சாகுபடியே பிரதானமாக இருக்கிறது. வன விலங்குகள் தொல்லை, விவசாயப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், வாழை சாகுபடியை அங்குள்ள பல விவசாயிகள் தேர்ந்தெடுத்து உற்பத்தி செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதியைப் பொறுத்த வரை பத்தாயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையைக் கணக்கில் கொண்டு நேந்திரன், கதளி வாழைகள் சாகுபடி செய்துள்ளனர். மார்ச் தொடங்கி ஜூன் வரையிலான கால கட்டத்தில் அறுவடைக்குத் தயாராகும் விவசாயிகளுக்கு, அப்பகுதியில் வீசும் சூறைக்காற்று பெரும் பாதிப்பையும், பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு வாழைக்கும் 150 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்து அறுவடைக்கு தயார் செய்யும் விவசாயிகள், அந்த மரம் சாய்ந்ததால், அதனைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்குக் கூட கூலி கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
சூறாவளியால் நஷ்டத்தைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் எந்தவித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை பயிர்காப்பீட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. ஒரு தாலுக்காவில் பயிர் செய்யப்பட்ட வாழை மரங்களில் 80 சதவிகித அளவு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே உரிய இழப்பீடு வழங்க வழிவகை உள்ளது.
வாழை பயிர் காப்பீட்டுக்காக ஏக்கருக்கு ஆறாயிரம் வரை பீரிமியம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நிச்சயமாக இழப்பீடு கிடைக்காது என்பதால் அந்த திட்டத்தை வாழை விவசாயிகள் தேர்ந்தெடுப்பதே இல்லை. எனவே வாழைக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.