திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீரராகவர் பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரடியில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக தேர் சென்றபோது உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.