தொட்டபெட்டா மலை சிகரம் பகுதிகளில் நான்காவது நாளாக காட்டு யானை உலா வருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை, உதகை தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. கடந்த 5ஆம் தேதி முதல் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
60 பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து வந்த நிலையில், தொட்டபெட்டா வனப்பகுதியில் இருந்த காட்டு யானை பட்டர் கம்பை கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தது. இந்நிலையில், தொட்டபெட்டா மலை சிகரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நான்காவது நாளாக காட்டு யானை உலா வருவதால், அந்த பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.