சென்னை மேற்கு மாம்பலத்தில் கோயில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக கோயில் இடிக்கப்பட்டதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி பகுதியில் உள்ள வடமதுரக்கண்ணன் கோயில் சிதலமடைந்து இருந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக கோயில் கட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம் இரவு அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் முன்னிலையில் கோயிலை இடிக்கும் பணிகள் நடைபெற்றன.
அப்போது அங்கு வந்த பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை கேட்டு கேள்வி எழுப்பியதாகவும், அப்போது அவரை அதிகாரிகள் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று அந்த கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோயில் நிலத்தை அபகரிக்க திருட்டுத்தனமாக இரவோடு இரவாக கோயில் இடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், மாமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசிய அறநிலையத்துறை அதிகாரிகள் மன்னிப்பு கேட்காவிட்டால், அறநிலையத்துறை அலுவலகம் முன், பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.