திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் சித்திரை திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
உற்சவர் முருகர் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு உற்சவர் முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை அதிகாலை தீர்த்தவாரி நிகழ்வுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.