இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், காஷ்மீரில் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாகப் பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்வதாகக் குற்றஞ்சாட்டினார்.
குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இப்பிரச்னைக்கு மதச்சாயம் பூச பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் மற்றும் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதைப் பாகிஸ்தான் மறுப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், கன்னியாஸ்திரிகள் தங்கியிருந்த கிறிஸ்தவ பள்ளி மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் கூறினார்.
இந்தியாவின் பதிண்டா ராணுவ தளத்தைத் தாக்கும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயல்பாடுகள் இருநாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளதாகக் கூறிய விக்ரம் மிஸ்ரி, சர்வதேச நிதியத்தில் நடக்கும் கூட்டத்தில் பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கக் கூடாது என இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.