ஏர்-பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி இந்திய வான்வழியில், பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தொடர் நடவடிக்கைகள் மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடர்பாக, 3-வது நாளாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்ணல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், இந்தியாவின் 36 இடங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாகத் தெரிவித்தார்.
மேலும், ஏர்-பஸ் 320 ரக பயணிகள் விமானத்தைக் கேடயமாக பயன்படுத்தி இந்திய வான்வழியில் பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியதாகக் குறிப்பிட்ட வியோமிகா சிங், இந்தியாவின் வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளைக் குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயன்றதாகக் கூறினார்.
முன்னதாக பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, பாகிஸ்தான் ராணுவம் துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி இந்திய எல்லைகளில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் அனுப்பிய பல ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகக் கூறிய அவர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.