2047-ஆம் ஆண்டு நாம் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் உள்ள ஸ்ரீ நாராயணி பீடம், விஸ்தார் அமைப்பு மற்றும் சேவாபாரதி ஆகியவற்றின் சார்பில் இலவச நடமாடும் மருத்துவ முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் பீடாதிபதி சக்தி அம்மா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் பேசிய எல்.முருகன், சேவாபாரதி அமைப்பு பல்வேறு இயற்கை இடர்பாடுகளின் போது தங்களை முழு அளவில் ஈடுபடுத்தி பணி செய்து வருவதாக தெரிவித்தார். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருவதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வழங்கியதை குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கண்ட வல்லரசு என்ற கனவை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
















