விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டியில் பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பதற்றம் நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் நடிகர் விஷால், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். இதனைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கு பரிசுகளை வழங்கி குழு புகைப்படம் எடுத்தபோது நடிகர் விஷால் திடீரென விழா மேடையிலேயே மயங்கி கீழே சரிந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விழா குழுவினர் நடிகர் விஷாலை மேடையிலேயே படுக்கவைத்தனர்.
பின்னர், விரைந்து சென்ற மருத்துவக்குழுவினர் விஷாலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மயக்கம் தெளிந்த நடிகர் விஷாலை அவருடன் வந்தவர்கள் கைத்தாங்களாக பிடித்து சென்று காரில் ஏற்றி சென்னைக்கு அழைத்து சென்றனர்.