திருப்பூர் அருகே இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே கோல்டன் நகரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், கோல்டன் நகரைச் சேர்ந்த 5 சிறுவர்கள் மற்றும் தருண் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில், ஒருவரை பிடித்து பிரகாஷ் தாக்கியதாகவும், அதில் அவரது மண்டை உடைந்ததாகவும் தெரியவந்தது.
மேலும், பழிக்குபழி நடவடிக்கையாக பிரகாஷின் தலையில் கல்லைப்போட்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.