கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர்கள் கருணாகரன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கட்டுமான பொருள்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் வலியுறுத்தினர்.
இதேபோல, ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஒருங்கிணைந்த பொறியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கட்டுமானப் பொருட்கள் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.
சேலத்திலும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கூட்டமைப்பின் தலைவர் விஜயபானு தலைமை தாங்கினார்.
கட்டுமானத்திற்குத் தனித் துறையை உருவாக்கப் போராட்டத்தின் வாயிலாக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.