மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காணவந்த பள்ளி மாணவர் வைகையாற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த ஜெயவசீகரன், அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் சோழவந்தானில் உள்ள வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வைக் காணச் சென்றுள்ளார்.
அப்போது அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மாணவரைச் சடலமாக மீட்டனர்.
இதேபோல, சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்ற பள்ளி மாணவனும் வைகையாற்றில் மூழ்கி உயிருக்குப் போராடிய நிலையில், அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.