பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையில், துல்லியமான தாக்குதல்களில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவத்தின் வலிமை மற்றும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதி மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக பிரம்மோஸ் மாறியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1983 ஆம் ஆண்டு இந்தியா, பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது. அதுதான் Integrated Guided Missile Development Programme ஆகும். இந்தியாவின் ஏவுகணை நாயகன் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த வழிகாட்டப் பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக, தரையிலிருந்து மேற்பரப்பு மற்றும் தரையிலிருந்து வான் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகையான ஏவுகணைகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
குறுகிய தூரத் தரையிலிருந்து மேற்பரப்பு வரையிலான பாலிஸ்டிக் ஏவுகணையான (Prithvi )பிரித்வி, இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையான (Agni )அக்னி, குறுகிய தூரக் குறைந்த தூரத் தரையிலிருந்து வான் ஏவுகணையான (Trishul )திரிசூல், நடுத்தர தூர தரையிலிருந்து வான் ஏவுகணையான (Akash) ஆகாஷ், மூன்றாம் தலைமுறை டாங்க் எதிர்ப்பு ஏவுகணையான (Nag )நாக், மற்றும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ( Agni Prime ) அக்னி பிரைம் ஏவுகணை ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் இந்தியா தயாரித்து சாதனை படைத்தது.
1990 ஆம் ஆண்டு நடந்த வளைகுடா போருக்குப் பிறகு, கப்பல்களைத் தாக்கும் ஏவுகணை அமைப்பில் நாட்டை மேம்படுத்துவது மிக அவசியமான தேவையாக இருந்தது. 1998 ஆம் ஆண்டு, ரஷ்யாவும் இந்தியாவும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் விண்வெளித்துறை நிறுவனமான என்.பி.ஓ.எம் (NPO Mashinostroeniya) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் உருவானது.
இந்திய நதியான பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மாஸ்க்வா நதியின் பெயரைச் சேர்த்து (BrahMos) பிரம்மோஸ் எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. பெயரிடப் பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இந்தியா 50.5 சதவீத பங்கையும், ரஷ்யா 49.5 சதவீத பங்கையும் வைத்துள்ளன. உலகின் ஒரே சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை அமைப்பான பிரம்மோஸை வடிவமைத்தல், மேம்படுத்துதல்,தயாரித்தல் மற்றும் சந்தைப் படுத்துதலே இந்தக் கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.
பிரம்மோஸ், அதன் உயர் துல்லியத்திற்குப் பெயர் பெற்ற ஒரு நீண்ட தூர சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும். இது அனைத்து வானிலை மற்றும் இரவு-பகல் நேரங்களிலும் செயல்படக்கூடிய ஏவுகணையாகும். பிரம்மோஸ், நிலம், கடல் மற்றும் வான் சார்ந்த இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பல்துறை ஏவுகணையாகும்.
இது “Fire and Forget” என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும்
பிரம்மோஸ், இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் பல்வேறு விமானங்களை ஏற்றுக்கொள்கிறது. தாக்குதலின் போது அதிக இயக்க ஆற்றலுடன் இருப்பதால், மிகப் பெரிய அழிவு சக்தியாக உள்ளது. பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை, சவாலான போர்க்களங்களில் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றதாகும்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான சோதனைகள் முடித்துள்ள பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை இந்தியாவின் முப்படைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. 2001-இல் முதல் முறையாக பிரம்மோஸ் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்தியக் கடற்படையில், 2005 ஆம் ஆண்டு முதல் கப்பலாக ஐஎன்எஸ் ராஜ்புத்துடன் பிரம்மோஸ் இணைக்கப் பட்டது. 2007 ஆம் ஆண்டு, இந்திய இராணுவத்தில் பிரம்மோஸ் இணைக்கப்பட்டது.
சுகோய்-30 போன்ற அதிநவீன போர் விமானங்களில்,1,500 கிலோமீட்டர் வரம்புடைய பிரம்மோஸ் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது. நீரின் மேற்பரப்பிலிருந்து 50 மீட்டர் கீழே, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவ முடியும்.
கடற்படை பிரம்மோஸ் ஏவுகணையை, செங்குத்தாகவோ அல்லது சாய்வாகவோ, நகரும் மற்றும் நிலையான கடற்படை தளங்களிலிருந்தும் ஏவ முடியும். இது கடலில் இருந்து கடலுக்கும், கடலில் இருந்து தரைக்கும் ஏவும் முறைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மோஸில் நான்கு முதல் ஆறு மொபைல் தன்னாட்சி ஏவுகணைகள் உள்ளன. ஒவ்வொரு ஏவுகணையிலும் மூன்று ஏவுகணைகள் உள்ளன. அவை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு இலக்குகள் மற்றும் வெவ்வேறு கட்டமைப்புகளில் மீது செலுத்த முடியும்.
பிரம்மோஸ் ஏவுகணையின் அதிகபட்ச வேகம் Mach 2.8 ஆகும். அதாவது, இந்த ஏவுகணை மணிக்கு சுமார் சுமார் 3,430 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாகும். இதனால், உலகில் உள்ள எந்த ஒரு உயர் தொழில்நுட்ப வான் பாதுகாப்பு அமைப்பாலும் பிரம்மோஸை இடைமறித்து அழிக்க முடியாது. குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறிக்க முடியாது.
ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டுக்கு இணங்க பிரம்மோஸ் ஏவுகணையின் தூரம் ஆரம்பத்தில் 290 கிலோமீட்டர் என்று வரையறுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், நிலம் மற்றும் கப்பல் சார்ந்த பிரம்மோஸின் வரம்பு 900 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வான்வழி ஏவப்படும் பிரம்மோஸின் வரம்பு 1500 கிலோமீட்டர் வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தற்போதுள்ள அதிநவீன சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளுடன் ஒப்பிடும்போது, பிரம்மோஸ் 3 மடங்கு அதிக வேகம் உடையதாகும். மேலும், 3 மடங்கு அதிக விமான தூரம் செல்லக்கூடியதும், 9 மடங்கு அதிக இயக்க ஆற்றல் உடையதுமாக பிரம்மோஸ் விளங்குகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார். மாநிலத்தின் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தில் லக்னோ முனையத்தில் 80 ஏக்கரில் 300 கோடி செலவில், இந்த தொழிற்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த அதிநவீன மையம், பாதுகாப்புத்துறையின் உற்பத்திக்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.
இந்த மையத்தில் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் க்ரூஸ் ஏவுகணைகள் அசெம்பிள் செய்யப்பட்டு சோதனை செய்யப்படும் என்றும், அடுத்தடுத்து,அடுத்த தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணைகளும் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. முந்தைய ஏவுகணையின் 2,900 கிலோ எடையை விட குறைவாக, அடுத்த தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணைகள் வெறும் 1,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.
ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த தொழில் சாலை, வருங்காலத்தில், ஆண்டுக்கு 100 முதல் 150 ஏவுகணைகள் வரை தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளை, பிலிப்பைன்ஸ், பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் கொள்முதல் செய்கின்றன. மேலும்,புரூனே, சிலி, எகிப்து, மலேசியா, ஓமன், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் இந்தியாவிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.