ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறில் 15 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோர் பண்ணை கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த திருமண நிகழ்வின்போது கிராம செயலாளர் சேது ராஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ், அகிலேஷ், முத்துச்செல்வம் ஆகியோருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கிராம செயலாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 15 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகத் தெரிவித்துள்ளனர்.