இந்தியா மற்றும் இந்து மக்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ள இஸ்லாமிய மதபோதகர் மசாவை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என மலேசியாவில் உள்ள இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து அகமம் அணி இயக்குநர் அருண் துரைசாமி மலேசியாவில் உள்ள இந்தியத் தூதருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசாங்கத்திற்கும், இந்து மக்களுக்கும் எதிராக அபு தல்ஹா அல்-மலிசி என்று அழைக்கப்படும் டாக்டர் மசா என்பவர் நேரடி அவதூறு பரப்பி வருவதாகவும், மசா மீது நடவடிக்கை எடுக்க கோரி மலேசியா காவல்துறை தலைமை அலுவலகத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மலேசிய சட்டங்களின் கீழ் டாக்டர் மசாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் இந்தியா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மத அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்து இஸ்லாமிய விவகாரத்துறையிடம் முறையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், டாக்டர் மசாவை இந்தியாவிற்குள் நுழையவிடக் கூடாது என்றும், அவருக்கு இந்தியக் கல்வி நிறுவனங்கள் உடனான தொடர்பைத் துண்டித்து, மசாவை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனநாயகம் மற்றும் சிறுபான்மை உரிமைகள் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பொது அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், இந்தியா, மலேசியா இடையேயான நீண்டகால ராஜதந்திர உறவு, மறைக்கப்பட்ட தீவிரவாத கதைகளால் பாதிக்கப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச ராஜதந்திரம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க இந்தியா விரைவாகச் செயல்பட வேண்டும் எனவும் இந்து அகமம் அணி இயக்குநர் அருண் துரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.