ராமநாதபுரம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பிக்க இறந்தவர்களின் பெயர்களையும் சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஊரணி கோட்டை-பழங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் நடமாடும் மருத்துவமனையின் சிகிச்சை பதிவுகளில் முறைகேடு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நோயாளிகளின் பெயர்களுடன், அவர்களது தந்தை அல்லது கணவர் பெயர்களையும் பதிவு செய்து, இருவருக்கும் தனித்தனி பதிவு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், இறந்தவர்களின் பெயர்களையும் சேர்த்து, அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மருத்துவ அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தெளிவான பதில் அளிக்காமல் மழுப்பினர்.