வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில், வழக்கு தொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக மொத்தம் 130 மனுக்கள் உள்ளன என்றும், 5 மனுதாரர்கள் மட்டுமே வாதிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், வக்பு சட்டத்திருத்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை அடுத்து வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரையிலும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் எனவும் ஆணையிட்டனர்.
மேலும், வழக்கின் முக்கிய வாதம் தொடர்பான குறிப்புகளைத் தயார் செய்து வரும் 17ஆம் தேதிக்குள் மத்திய அரசும், மே 19ஆம் தேதிக்குள் மனுதாரர் தரப்பும் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.