பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியர்கள் துருக்கியைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் பாகிஸ்தானுக்குத் துருக்கி துணை நிற்கும் என்று அதிபர் எர்டோகன் உறுதியளித்தார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா கூறிய உடனேயே, துருக்கி விமானப் படையின் சி-130 விமானம் பகிஷனில் தரை இறங்கியது. தொடர்ந்து,துருக்கியின் போர்க்கப்பல் கராச்சி துறைமுகத்தில் நிலைநிறுத்தப் பட்டது. இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் என்று துருக்கி கூறியது.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி அதிபர் எர்டோகன் தனது Insta பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.மேலும் பஹல்காம் தாக்குதலுக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பாகிஸ்தானின் வேண்டுகோளை எர்டோகன் ஆதரித்திருந்தார்.
இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானை ஆதரிக்கப் பிற வளைகுடா நாடுகள் எல்லாம் விலகி நின்ற போதும், ஆப்ரேஷன் சிந்தூரைக் கண்டித்த முதல் நாடு துருக்கி தான். அதிக அளவில் துருக்கியில் உற்பத்தி செய்த (SONGAR) சோங்கர் ட்ரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் தனது வீரர்களையும் இந்தியாவுக்கு எதிராகப் போரிட அனுப்பி வைத்தது துருக்கி. ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக இரண்டு துருக்கிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தன. 2023 ஆம் ஆண்டு, துருக்கி மற்றும் சிரியாவை மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கிய இக்கட்டான நேரத்தில், ஆப்ரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய அரசு துருக்கிக்கு நிவாரண மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.
ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில், துருக்கி பாகிஸ்தான் பக்கமே நிற்கிறது. இதனால் இந்தியாவுக்குத் துரோகம் செய்ததாகக் கோபமடைந்த இந்தியர்கள் துருக்கியை நிராகரித்துள்ளனர். BoycottTurkey என்ற ஹேஷ்டேக் கடந்த சில நாட்களாகப் பிரபலமாகி வருகிறது.
துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களை இந்திய வணிகர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால்,1,500 கோடி ரூபாய்க்கும் மேல் துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த சலவைக் கல் இறக்குமதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகத் துருக்கியிலிருந்து வருகிறது. இந்நிலையில், துருக்கியிலிருந்து சலவைக் கற்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று இந்திய வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
துருக்கி சுற்றுலா முன்பதிவு ரத்து 250 சதவீதம் அதிகரித்துள்ளது. துருக்கி பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தை டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நிறுத்தி உள்ளது. இந்தியாவில் புறக்கணிக்கப் படுவதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தான் துருக்கி உறவு வலுவான சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகக் கூறியுள்ளார்.
துருக்கி காட்டிய வலுவான ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கியுடனான உறவு ஒவ்வொரு புதிய சவாலிலும் வலுவடைகிறது என்று தெரிவித்துள்ளார். எர்டோகன் துருக்கியின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, பாகிஸ்தானுடனான இராணுவ உறவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவுடனான உறவில் பெரிய இடைவெளி உருவாகி வருகிறது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் துருக்கியும் பாகிஸ்தானும் இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றன என்று கூறப்பப்பட்டாலும், துருக்கி கைகளில் இந்தியர்களின் இரத்தக்கறை படிந்துள்ளது என்பதே உண்மை.