புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்ப்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை வடக்காடு மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுச் சமூகத்தினர் சேர்ந்து பட்டியலின மக்களைத் தாக்கி வீடுகளுக்குத் தீவைத்ததாகவும், காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தாமல் கண்துடைப்புக்காகச் சிலரை மட்டும் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் தலைமையில் தனிக்குழு அமைத்து இழப்புகள் குறித்து அறிக்கை அளிப்பதோடு, தாக்குதல் நடத்திய அனைத்து நபர்கள் மீதும் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர். வழக்கு விசாரணையின்போது இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் ஏன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் மற்றும் சம்பவம் நடந்த இடத்தின் மே 4 முதல் 7-ம் தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.