கோவையில் வாடகை பிரச்சனை காரணமாகக் குடியிருக்கும் வீட்டின் முன்பு உரிமையாளர் கட்டட கழிவுகளைக் கொட்டி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் அதே பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மோகன்ராவ் ஷிண்டே என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
மோகன்ராவ் ஷிண்டேவிற்கும் சாமுவேலுக்கும் இடையே வாடகை ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால், வழக்கு தொடர்ந்த சாமுவேல், வாடகை பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தி வந்துள்ளார்.
இதனால், இருதரப்பினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சாமுவேன் வீட்டின் முன்பு மோகன்ராவ் ஷிண்டே கட்டட கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டியுள்ளார்.
மோகன்ராவ் ஷிண்டேவின் குடும்பத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக சாமுவேலின் மகன் வேதனை தெரிவித்துள்ளார். குடியிருக்கும் வீட்டின் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றைத் துண்டித்து விட்டதாகவும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவு கோரிக்கை விடுத்துள்ளனர்.