மதுரையில் விதிமுறைகளை மீறி மலைகளை உடைத்து 24 மணி நேரமும் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வகுத்து மலை மற்றும் வண்ணாத்தி மலை ஆகிய இரு மலைகள் அமைந்துள்ளன.
இந்நிலையில், அங்குள்ள வண்ணாத்தி மலையைச் சட்டத்திற்குப் புறம்பாகச் சக்தி வாய்ந்த வெடிகளை வைத்துத் தகர்த்து, கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் பணிகள் 24 மணி நேரமும் நடந்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கடத்தப்படும் கனிம வளங்கள் குறித்து அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீதும், தடுக்க தவறும் அதிகாரிகள் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.