பலுசிஸ்தானை தொடர்ந்து தனி நாடு முழக்கத்துடன் சிந்து மாகாண மக்களும் போராட்டங்களை வலுப்படுத்துவதால் பாகிஸ்தான் அரசு கலக்கமடைந்துள்ளது.
சிந்து மாகாணத்தில் இருந்து கராச்சியை பிரித்த பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்குக் கிளம்பிய எதிர்ப்பு, பின்னர் தனி நாடு கோரிக்கையாக எழுந்தது.
தொடர்ந்து தனி நாடு போராட்டத்தை முன்னெடுத்த ஜெய் சிந்து விடுதலை இயக்கத் தலைவர்களைப் பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், தனி நாடு கோரியும், பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் அமைதியான முறையில் தொடரும் ஜெய் சிந்து விடுதலை இயக்கத்தின் போராட்டங்கள் பாகிஸ்தான் அரசைக் கலக்கம் அடையச் செய்துள்ளன.
குறிப்பாக உருது திணிப்பு, சிந்து மக்களின் நிலங்களை அரசுடைமையாக்குவது போன்ற அடக்குமுறைகளைப் பாகிஸ்தான் அரசு முன்னெடுத்ததால் தனி நாடு கோரிக்கை வலுக்கத் தொடங்கியது.
இந்நிலையில், சிந்து தேசியவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், அவர்களை உடனடியாக விடுவிக்கவும் பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
பலுசிஸ்தானை தொடர்ந்து சிந்து மாகாணத்தையும் இழந்து விடக்கூடாது என்பதால் போராட்டக்காரர்களை முடக்கும் பணியில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சிந்து நாடு கோரி போராடுபவர்கள் மீது கடுமையான மனித உரிமை மீறல்களைப் பாகிஸ்தான் அரசு நடத்தியிருப்பதை அமெரிக்க அரசும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.