ஈரோடு சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியைப் படுகொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் கடந்த 1ஆம் தேதி, வீட்டில் மர்ம நபர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
பாக்கியம் அணிந்திருந்த 11 சவரன் நகை மற்றும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும், திருப்பூரில் கடந்தாண்டு தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கும், சிவகிரி இரட்டை கொலை சம்பவமும் ஒன்றுபோல நடந்திருப்பதால், திருப்பூர் மாவட்ட போலீசாரும், சிவகிரி கொலை வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மரம் ஏறும் தொழிலாளர்களான ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவருக்குக் கொலை வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஞானசேகரனையும் கைது செய்த போலீசார், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.