ஈரோட்டில் விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள நடிகர் சத்யராஜ் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செஞ்சி வாடி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் நடிகர் சத்யராஜின் உறவினரான பாலசுப்பிரமணியம் என்பவர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் துணையுடன் தங்களது விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை ஆக்கிரமித்துள்ள பாலசுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை செஞ்சி வாடி கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.
உடனடியாக அவர்களை போலீசார் கைது செய்து தேனாம்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் அடைத்தனர்.