ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர், 5ஆவது நாளாக ரசாயன நுரையுடன் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 573 கன அடியில் இருந்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது.
44 புள்ளி 28 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 41 புள்ளி 98 அடி வரை நீர் இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 794 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஆற்று நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் செல்கின்றன.
மழைக் காலங்களில் ரசாயன நுரைகள் கடும் துர்நாற்றத்துடன் செல்வது வாடிக்கையாகி விட்டதாகவும், 5வது நாளாக தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், தென் பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.