தமிழகம் காவி நாடு அல்ல, திராவிட நாடு என வழக்கம்போல பிரிவினையைத் தூண்டியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஆன்ம பலமே ஆன்மிக பலம்தான் என்பதை முதலமைச்சர் உணராமல் பேசி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து மத கடவுள்களைக் கேலியும், கிண்டலுமாக திமுக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும், காவியை எதிர்ப்பதாகச் சொல்லி திமுகவிற்கு ஓட்டுப்போட்ட இந்துக்களின் மனதை முதலமைச்சர் புண்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எப்போதெல்லாம் திமுகவின் ஊழலும் லஞ்சமும் அம்பலப்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் திராவிடம், இந்தி என வாய்க்கு வந்தபடி பேசுவது திமுகவின் வாடிக்கை எனக்கூறியுள்ள அவர், டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சோதனையைத் திசைதிருப்பவே முதலமைச்சர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் அறிந்துள்ளதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.