நெல்லை மாநகராட்சி மேலகுலவணிகர்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாதாளச் சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடும் அவலத்தைக் கண்டித்து மூதாட்டி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெல்லை மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட குறிச்சி மற்றும் மேலகுலவணிகர்புரம் பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து வெளியேறி வருகிறது. இதேபோன்று, மேலப்பாளைய மண்டலம் பி.வி.கே.சூப்பர் மார்க்கெட் தெருவிலும் கடந்த 2 நாட்களாக பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர், குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்துள்ளது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், குழந்தைகளை வைத்து கொண்டு எப்படி வசிப்பது என்றும், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மூதாட்டி ஒருவர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகள், மக்கள் பிரச்சனை கேட்க வரமாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கழிவுநீர் குடியிருப்புக்குள் புகுந்து துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். மூதாட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மூதாட்டியின் கோபமும், ஆதங்கமும் மிகவும் நியாயமானது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடை குழாயில் வெளியேறும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.