செஞ்சியில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் தாலுகாவில் நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பாசிப்பயிர் போன்ற உணவு தானியங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நிலத்திலேயே சாய்ந்து முளைக்க தொடங்கியதாகவும் கூறியுள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.