கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீருடன் வெளியேறிய ரசாயன நுரைகளால், அருகிலுள்ள தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக 44.28 அடி மொத்த கொள்ளளவு கொண்ட கெலவரப்பள்ளி அணையில், தற்போதைய நீர் இருப்பு 41.98 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடும் நிலையில், உபரி நீருடன் குவியல் குவியலாக வெளியேறிய ரசாயன நுரைகளால் அருகில் இருந்த தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவானதுடன், ரசாயன நுரைகளில் இருந்து வெளியேறிய துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதற்கிடையே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.