திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு வாரமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படாததால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர். இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தொட்டியம் – காட்டுப்புத்தூர் பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.