மதுராந்தகம் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின்போது தாழ்வாகச் சென்ற உயர் மின்னழுத்த கம்பி தேர் மீது உரசியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஒரத்தி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், 4ஆம் நாள் நிகழ்ச்சியில் நாகக்கன்னி மாலையிடும் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
அப்போது இரும்பால் செய்யப்பட்ட தேரை டிராக்டர் மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றபோது தாழ்வாகச் சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது உரசியதில் தேர் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் ராம்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.