பல்லடம் அருகே தனியார் டையிங் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர், பொது மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் டையிங் நிறுவனத்தில் உள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 பேர் ஈடுபட்டனர். அப்போது, விஷவாயு தாக்கி 4 பேரும் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக, நிறுவன ஊழியர்கள் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட சரவணன், வேணுகோபால், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனியார் மருத்துவமனையில் சின்னசாமி என்பவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளர் நவீன், அவரது தந்தை பாலசுப்பிரமணியம், பொது மேலாளர் தனபால், லாரி ஓட்டுநர் சின்னசாமி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.