கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூரில் உள்ள திண்டீஸ்வரர் கோயில் பல ஆண்டுகளாக மூடி கிடப்பதாகவும், கோயிலில் தினசரி பூஜைகள் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பரத் சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூடியிருக்கும் திண்டீஸ்வரர் கோயிலைத் திறந்து தினமும் ஒருவேளை பூஜை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், பக்தர்கள் வேண்டுதல்களுக்காகப் பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என அறிவுறுத்தி நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.