தங்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்ததற்கு மூன்றாவது நபரே காரணம் என நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரவி மோகனால் தனது வாழ்வின் ஒளி எனக் குறிப்பிடப்பட்டவர்தான் தங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என, கெனிஷாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அந்த நபர் சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கு முன்பே தங்கள் வாழ்க்கைக்குள் வந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான அனைத்து பொருட்களையும் ரவி மோகன் எடுத்துக் கொண்டுதான் வீட்டை விட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ள ஆர்த்தி, உண்மையில் அவர் தன் பிடியிலிருந்து தப்பிச்செல்ல நினைத்திருந்தால், பெற்றோர் வீட்டுக்குச் செல்லாமல் ஏன் மூன்றாவது நபரின் வீட்டிற்குச் சென்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், குழந்தைகளை அப்புறப்படுத்தியதாக உருகும் ரவி மோகன், அவர்களைச் சந்திக்கவோ அல்லது தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.