கொடைக்கானலில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத்துறையும் இணைந்து நடத்திய இந்த வான் சாகச நிகழ்ச்சி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், இயற்கை எழிலுக்கும் பனி மூட்டத்திற்கும் இடையே நடைபெற்ற வானில் பறக்கும் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய பாரா செய்லிங் வான் சாகச நிகழ்ச்சி, வானத்தில் பறந்தபடியே கொடைக்கானல் அழகை ரசிக்கச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
சவால் மிகுந்த இந்த பாரா செய்லிங் சாகசம் சுற்றுலாப்பயணிகளை மட்டுமல்லாது உள்ளூர் மக்களுக்கும் புதுவித அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. தலைக்கவசம் உட்பட அனைத்துவிதமான பாதுகாப்பு கவசங்களோடு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பாரா செய்லிங் செய்து மகிழ்ந்தனர்.
கடந்த 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்ற பாரா செய்லிங்கில் பயணிக்கும் முறை குறித்தும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொண்டிருந்த கொடைக்கானல் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு தெரிவித்தார்
கோடைக் காலத்தில் ரம்மியமான சூழலை அனுபவிக்கக் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த பிரஸ்லிங் புதுவித அனுபவத்தோடு உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. கொடைக்கானலில் தொடங்கியிருக்கும் இந்த பாரா செய்லிங் சாகச பயணம் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனச் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.