ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், திமுக நிர்வாகி தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்ததாகவும் அந்த மாணவி கூறியிருந்தார்.
இது தொடர்பாகப் புகாரளித்தும் திமுக நிர்வாகி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாணவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறையினர் புகார் மனுவிற்குச் சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறியுள்ளார்.
இதனால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டதாகக் கூறியுள்ள மாணவி, தைரியத்துடன் எதிர்த்துப் போராடி தற்போது உருக்குலைந்து விட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து தெய்வச்செயலை நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாகக் கவியரசு என்பவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.