அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதமானதால், மதுக்கடை ஊழியரை பாட்டிலால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஓதிமலை சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், காலி மதுப்பாட்டில்களை வாங்கும் கவுன்டரில் ரவிக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், டாஸ்மாக் கடையில் மது குடிக்க வந்த ஆசான் என்பவர் மது அருந்திவிட்டு, காலி பாட்டில்கள் வாங்கும் கவுன்டருக்கு சென்றுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த ரவிக்குமார், லாரியில் வந்துள்ள மதுபாட்டில்களை இறக்கி கொண்டிருப்பதால், சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆசான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கையில் வைத்திருந்த காலி மதுபாட்டிலால் ரவிக்குமாரை தாக்கியுள்ளார்.
இதில், ரவிக்குமாருக்கு தலை மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.