நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானதல்ல என்றும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு முக்கியம் எனவும் அறிவுறுத்தியது.
ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்துக்கு எதிராக தேனி மாவட்டத்தை சேர்ந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்த சிங்காரவேலன், தொட்டுசிக்கு பத்மநாபன், ராஜா, செல்வகுமார் ஆகியோர் நிபந்தனைகளை மீறி வருவதால் ஜாமினை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு வைப்பாளர் பாதுகாப்பு சட்டம், இத்தகைய நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானதல்ல என்று அறிவுறுத்திய நீதிபதி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மீண்டும் பெறும் வகையில் புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.