மென்பொருள் மூலமாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என இணையம் மூலமாக விளம்பரம் செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட பொறியாளரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் ஊழியரான ஜெயராஜ் என்பவர் கடந்த மாதம் இணையத்தில் ஒரு விளம்பரத்தை கண்டுள்ளார். அதில், பங்குச்சந்தையில் தானாக பங்குகளை வாங்கி விற்கின்ற மென்பொருள் செயலி உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மென்பொருள் செயலியை பெற 40 ஆயிரம் செலுத்தினால், இணையம் மூலமாக அனுப்படும் என்றும், அதனை செல்போனில் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனை கண்ட ஜெயராஜ், அந்த லிங்கை பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் செயலி வராததால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சென்னையில் அல்கோ டிரேடிங் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்வின் குமாரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 14 மடிக்கணினி, காரை பறிமுதல் செய்தனர்.