சென்னை மடுவின் கரை மேம்பாலம் அருகே மதுபோதையில் தாறுமாறாகக் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மடுவின் கரை மேம்பாலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், காரில் இருந்தவர் தரமணியைச் சேர்ந்த தலைமைக் காவலரான செல்வம் என்பதும், அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தலைமைக் காவலர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக தரமணி ரயில் நிலையம் அருகே தலைமைக் காவலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.