காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் ராஜாவுடன் அவர் வசித்து வந்தார்.
வழக்கம்போல் காலை ஆடு மேய்க்கச் சென்ற சரஸ்வதி இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பாததால் மூதாட்டியை உறவினர்கள் தேடிச் சென்றனர்.
அப்போது, மூதாட்டிக்குச் சொந்தமான தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், சரஸ்வதி சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி காதில் இருந்த தோடு மற்றும் மூக்குத்தியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 தனிப்படைகளை அமைத்துத் தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.