தாமிரபரணி ஆற்று நீரில் உள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை சுத்தப்படுத்த RRR என்னும் நவீன இயந்திரத்தை தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இயங்கி வரும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பை முடித்து 10-ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 5 பேர், ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பு செல்லும் 2 மாணவர்கள் ஒன்றிணைந்து மாசடைந்து கிடக்கும் தாமிரபரணி நதியை சுத்தம் செய்ய திட்டமிட்டனர்.
அவர்களுக்கு சென்னையை சேர்ந்த D4V என்னும் தன்னார்வ அமைப்பு ஆதரவு கரம் நீட்டியது. இதையடுத்து தாமிரபரணி தண்ணீரை சுத்தம் செய்யும் வகையில் நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இதற்கு River Rescue Restoration என்ற பொருளில் RRR என்று பெயரிட்டு உள்ளனர்.
மனித சக்தி இல்லாமல் DC பேட்டரி திறனை கொண்டு இயங்கும் இந்த இயந்திரத்தை கரையில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை ரிமோட் மூலம் செயல்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.