மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள், இளம்பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்லூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான தங்கபாண்டி, காட்டுப்பூச்சி ஆனந்த் ஆகியோருக்கும், பிரதாப் மற்றும் அவரது தம்பி தரப்பினருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் பிரதாப் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு தங்கபாண்டியும், காட்டுப்பூச்சி ஆனந்தும் காரணம் என 17 வயது சிறுவனான பிரதாப்பின் தம்பியிடம் பிரதாப்பின் காதலி சிவப்பிரியா கூறியுள்ளார்.
இதனிடையே, தமது உறவுக்கார பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த சிவப்பிரியாவை தங்கப்பாண்டியும், காட்டுப்பூச்சி ஆனந்தும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சிவப்பிரியா, பிரதாப்பின் தம்பியைத் தூண்டிவிட்டுத் தங்கப்பாண்டியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
மார்க்கெட் பகுதியில் பேசிக் கொண்டிருந்த தங்கப்பாண்டியை பிரதாப்பின் தம்பி உட்பட 4 பேர் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய சிவப்பிரியா, பிரதாப்பின் தம்பி உட்பட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.