வக்பு சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், வக்பு என்பது ஒரு கருத்தியல்தான், அது இஸ்லாமியச் சமூகத்தில் உருவான கருத்தே தவிர, அந்த மார்க்கத்தின் வழிகாட்டு நெறி அல்ல எனத் தெரிவித்தார்.
பல இஸ்லாமிய நாடுகளில் கூட இந்த கருத்தியல் ஒரு சமூக நிறுவனமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
வக்பு என்பது நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களைப் பராமரிப்பதற்கான ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும்வழிபாட்டுக்கும் வம்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் வாதிட்டார்.
வக்பு என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்றும், வக்பு சொத்து தொடர்பாக பிரச்சனை எழுந்ததால் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்டத் திருத்தம் தலையிடவில்லை என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.