திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவன் – மனைவி பலியான சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் சூரிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், ஆனந்தி தம்பதி தங்கள் மகளுடன் இரு சக்கர வாகனத்தில் குள்ளாய்பாளையம் பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாலத்துக்காகத் தோண்டப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்படாத பள்ளத்தில் இருட்டில் நிலை தடுமாறி விழுந்தில் நாகராஜ், ஆனந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மகள் தீக்ஷிதா மேல்சிகிச்சைக்காகக் கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து குண்டடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், இதுகுறித்து ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.